கோல லங்காட், செப் 14- தஞ்சோங் சிப்பாட் தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டம் வட்டார மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
அந்த தடுப்பூசித் திட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 550 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டதாக தஞ்சோங் சிப்பாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் அந்நிய நாட்டினர் எனக் கூறிய அவர், இத்திட்டத்திற்கு கிடைத்த ஆதரவும் மிகவும் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாக கூறினார்.
அந்நிய நாட்டினர் தடுப்பூசி பெறுவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அந்நிய நாட்டினர் தடுப்பூசி பெறாத பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கோவிட்-19 பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றார் அவர்.
தஞ்சோங் சிப்பாட், காம்ப்ளெக்ஸ் முகிபாவில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் இன்னும் தடுப்பூசி பெறாத நிலையில் இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசித் திட்டம் உண்மையில் வரவேற்கக்கூடியது, இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும். அனைவரும் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மாநில அரசு கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டம் 11 தொகுதிகளை இலக்காக கொண்டு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.


