ஷா ஆலம், செப் 14- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடமாடும் தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் சுற்று நடவடிக்கை பத்து தீகா தொகுதியில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு இந்த தொகுதியில் கிடைத்து வரும் அபரிமித ஆதரவின் அடிப்படையில் இந்த இரண்டாம் கட்ட அமலாக்கம் பரிந்துரைக்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
நடமாடும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பத்து தீகா தொகுதியில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்தோம். எனினும் பிற்பகல் 1.00 மணியளவில் 280 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. மாலைக்குள் எஞ்சிய தடுப்பூசிகளும் முடிந்து விடும் என்பதால் மற்றொரு சுற்று தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான மக்கள் இன்னும் தடுப்பூசி பெறாததை நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன. கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது போன்ற காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் செல்வேக்ஸ் மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெற முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது என்றார் அவர்.
காம்ப்ளெக்ஸ் பாடாங் ஜாவாவில் நேற்று நடைபெற்ற செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பத்து தீகா தொகுதிக்கு வெளியே உள்ள சிலர் இங்கு தடுப்பூசி பெறுவதற்கு செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அவர்களின் தொகுதிகளில் இத்தகைய நடமாடும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும் என்பதால் இத்தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றார் அவர்.


