ஷா ஆலம், செப் 14- இலக்கவியல் வர்த்தக நடவடிக்கைகளின் வாயிலாக பொருளாதார நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான முயற்சிகளில் சிலாங்கூர் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
தற்போது குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வங்கி, விவசாயம், மின் வர்த்தகம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைள் துரித வளர்ச்சி கண்டு வருவதன் அடிப்படையில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இலக்கவியல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான வசதிகளையும் அடித்தளத்தையும் உருவாக்குவது மாநில அரசின் கடமையாகும் என்றார் அவர்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற எஸ்.ஏ.பி. எனப்படும் சிலாங்கூர் விரைவு 2021 திட்டத்தை காட்சிப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 30 எஸ்.ஏ.பி. பங்கேற்பாளர்கள் முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு துறையினருக்கு விளக்கமளிப்பை வழங்கினர்.
மாநில அரசு வழங்கி வரும் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான முயற்சியில் இந்த எஸ்.ஏ.பி. உறுப்பினர்கள் முக்கிய பங்கினை ஆற்றுவர் என்றும் டத்தோ தெங் நம்பிக்கைத் தெரிவித்தார்.


