ECONOMY

நீர் மாசுபாடு- கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 இடங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்படலாம்

31 ஆகஸ்ட் 2021, 9:52 AM
நீர் மாசுபாடு- கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 இடங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்படலாம்

ஷா ஆலம், ஆக 31- ஜெண்டேராம் ஹிலிர் சுத்திகரிக்கப்படாத நீர் அழுத்த நிலையத்தில் நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரில் வாடை வீசுவது இன்று காலை 11.10 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இதனால் பெட்டாலிங் மாவட்டத்தில் 172 இடங்களும் உலு லங்காட் மாவட்டத்தில் 54 இடங்களும் சிப்பாங்கில் 194 இடங்களும் புத்ரா ஜெயாவில் 23 இடங்களும் கோல லங்காட்டில் 20 இடங்களும் நீர் விநியாகத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார்.

இந்த நீர் மாசுபாடு பிரச்னைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு சுங்கை செமினி மற்றும் அதன் கிளை ஆறுகளில் சோதனை நடவடிக்கையை ஆயர் சிலாங்கூர் மற்றும் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் ஆகியவை கூட்டாக மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்ட காரணத்தால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 463 பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயனீட்டாளர்கள் நீர் விநியோகத்தை பெறுவதில் உதவுவதற்காக  அவசரகால நடவடிக்கைத் திட்டத்தை ஆயர் சிலாங்கூர் முடுக்கி விட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள இடங்கள் குறித்த விபரங்களை www.airselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாகவும் ஆயர் சிலாங்கூர் செயலி மூலமாகவும் பொது மக்கள் அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.