ECONOMY

மக்களிடையே மனநலப் பிரச்னைக்கு தீர்வு காண “சேஹாட்“ திட்டம் அறிமுகம்

31 ஆகஸ்ட் 2021, 2:57 AM
மக்களிடையே மனநலப் பிரச்னைக்கு தீர்வு காண “சேஹாட்“ திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், ஆக 31- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன நலம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் “சேஹாட்“ எனப்படும் சிலாங்கூர் மன ஆரோக்கிய திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

செலங்கா செயலி வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் மன நலம் சார்ந்த தொடக்க அறிகுறிகளை சுயமாக பரிசோதனை செய்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தொடக்கக் கட்ட பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் சேஹாட் திட்டத்தின் கீழ் பல்வேறு அடுத்தக் கட்ட சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் மன நலம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வையும் மன நல பாதுகாப்பின் அவசியத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைக்க இயலும் என்றார் அவர்.

இத்திட்டத்தின் கீழ் மனநலக் கல்வி தொடர்பான 30 காணொளிகளை காண்பதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் எனக் கூறிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு சைகை மொழி பெயர்ப்பும் இதில் இடம் பெறும் என்றார்.

மன நலப் பாதிப்பை எதிர்நோக்கியவர்களுக்கு சமூக ஆதரவை வழங்கும் வகையில் சேஹாட் ஆய்வரங்கு நடத்தப்படும். இந்த ஆய்வரங்கின் வாயிலாக நிகழ்வின் வழி நடத்துநர் மற்றும் மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுடன் இயங்கலை  மூலம் உரையாடும் வாய்ப்பையைம் சம்பந்தப்பட்டவர்கள் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

சேஹாட் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசு ஐந்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி கூறியிருந்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.