ECONOMY

பொது முடக்கம் காரணமாக எம்.பி.ஐ. மற்றும் பி.கே.என்.எஸ். வருமானம் பாதிப்பு

27 ஆகஸ்ட் 2021, 11:10 AM
பொது முடக்கம் காரணமாக எம்.பி.ஐ. மற்றும் பி.கே.என்.எஸ். வருமானம் பாதிப்பு

ஷா ஆலம், ஆக 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான இரு துணை நிறுவனங்கள் குறைவான வருமானத்தைப் பதிவு செய்தன.

எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் கடந்தாண்டு 10 கோடியே 88 லட்சம் வெள்ளி வருமானத்தைப் பெற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த 2019 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 41 கோடியே 74 லட்சம் வெள்ளியாகவும் 2018ஆம் ஆண்டில் 12 கோடியே 3 லட்சம் வெள்ளியாகம் இருந்த தாக அவர் சொன்னார்.

அதே சமயம் பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் கடந்தாண்டில் 51 கோடியே 2 லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்டியது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 65 கோடியே 97 லட்சம் வெள்ளியாகவும் 2018ஆம் ஆண்டில் 61 கோடியே 32 லட்சம் வெள்ளியாகவும் இருந்தது என அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டில் இவ்விரு நிறுவனங்களின் வருமானம் சற்று குறைந்துள்ளது. இந்த வருமான பாதிப்புக்கு நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக உள்ளது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் துணை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து ஜெரம் சட்டமன்ற உறுப்பினர் சாஹிட் ரோஸ்லி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ்விரு நிறுவனங்களின் நடவடிக்கைச் செலவினம் குறித்து கருத்துரைத்த அமிருடின், செலவினங்களைச் சமாளிக்கும் ஆற்றல் தற்போதைக்கு உள்ளதால் சொத்துக்களை விற்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.