ECONOMY

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 120,000 அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி

27 ஆகஸ்ட் 2021, 10:32 AM
செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 120,000 அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி

ஷா ஆலம், ஆக 27- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டங்களின் வாயிலாக 120,030 அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

செல்வேக்ஸ் திட்டம் தவிர்த்து மைசெஜாத்ரா செயலி மூலம் பதிந்து கொண்ட 333,847 அந்நிய நாட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக் கொண்ட வேளையில் 597,724 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அந்நிய நாட்டினர் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கும் தரப்பினராகவும் விளங்குவதால் அவர்களின் நலனிலும் மாநில அரசு அக்கறை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டினர் தடுப்பூசியைப் பெறுவதை விரைவுபடுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் அரசு செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக  அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று அந்நியத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடர்பில் ரவாங் உறுப்பினர் சுவா வேய் கியாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது சித்தி மரியா இதனைக் குறிப்பிட்டார்.

செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சில அந்நிய நாட்டினர் தடுப்பூசியைப் பெறுவதை தவிர்ப்பது இந்த தடுப்பூசித் திட்டத்தில் தாங்கள் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவாலாகும் என்றும் அவர் சொன்னார்.

சில சமயங்களில் அந்நிய நாட்டினர்  வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் கடப்பிதழ்கள் ஒரே மாதிரியான எண்களைக் கொண்டிருப்பது தங்களுக்கு சிக்கலை உண்டாக்கியது என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.