ஷா ஆலம், ஆக 20 - சிலாங்கூரில் வயது வந்தோரில் 98 சதவீதம் பேர் தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டம் (PICK) மற்றும் சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) ஆகியவற்றின் கீழ் கோவிட் - 19 தடுப்பூசிகளின் முதல் டோஸ்யை பெற்றுக்கொண்டனர்.
தற்போதைய முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, செப்டம்பர் மாதத்திற்குள் சிலாங்கூர் தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) இரண்டாம் கட்டத்திற்கு மாறலாம் என்று மாநில நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"மாநிலம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் (பிபிவி) நாங்கள் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், தடுப்பூசி விகிதம் கடந்த வாரம் 80 சதவீதமாக இருந்தது. "இருப்பினும், மைசெஜ்தேராவின் சமீபத்திய புதுப்பிப்புக்குப் பிறகு, முதல் டோஸைப் பெற்ற வயது வந்தோரின் தற்போதைய சதவீதம் 98 சதவிகிதமாக உள்ளது" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மீடியா சிலாங்கூர் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
சிலாங்கூருக்கு வெளியே கோலாலம்பூரிலும், அஸ்ட்ராஜெனெகா தேர்வு திட்டம் மூலம் சிலாங்கூர் மக்கள் தடுப்பூசிகளைப் பெறுவது அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். "ஆகையால், செப்டம்பரில் எந்த நேரத்திலும் நாம் இரண்டாம் கட்டத்தில் நுழைய முடியும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
"மேலும், முக்கியமான கோவிட் -19 வழக்குகளுக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை எண்ணிக்கை கிள்ளானில் உள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் சுங்கை பூலோவில் உள்ள சுங்கை பூலோ மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் கணிசமாகக் குறைந்துள்ளது," என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு 60 சதவிகிதம் தடுப்பூசி விகிதத்தை அரசு அடைய முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாக அமிருடின் கூறினார், ஏனெனில் தற்போதைய விகிதம் 56 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில், மாநிலத்தில் முன் பதிவின்றி தடுப்பூசி திட்டத்தில் பங்குகொள்ளும் திட்டத்தை மாநில அரசு நீட்டிக்காது என்று அமிருதீன் கூறினார். "பல PPV கள் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் தங்கள் செயல்பாட்டை நிறுத்திவிடும்.
அதன் பிறகு, எங்கள் நடமாட்ட (மொபைல்) தடுப்பூசி சேவை அல்லது உள்ளூர் ஏற்பாடுகள் அடிப்படையில் தடுப்பூசி இடங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் தடுப்பூசி போடப்படாத நபர்களை அடையாளம் காண முயற்சிப்போம்.
"ஒருவேளை தடுப்பூசி செயல்முறை எங்கள் மருத்துவமனைகளிலோ அல்லது கிளினிக்களிலோ மேற்கொள்ளப்படும்," என்று அமிருடின் ஷாரி கூறினார், மொபைல் தடுப்பூசி முயற்சிக்கு கூடுதலாக 100,000 டோஸ் ஒதுக்கப்படும் என்றார் அவர்.


