கிள்ளான், ஆக 15- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது முதல் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்காக செந்தோசா சட்டமன்றத் தொகுதி 60,000 வெள்ளி வரை செலவிட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சுமார் 2,200 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
அத்தியாவசியப் பொருள்களான அரிசி, மாவு, சீனி, சார்டின், பால், பீகூன், மேகி மீ உள்ளிட்ட பொருள்களைத் ஏற்பாடு செய்வதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 60 விழுக்காட்டுத் தொகையைப் பயன்படுத்தினோம்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் தினசரி பொதுமக்களிடமிருந்து உதவிக்கான கோரிக்கைகளைப் பெற்று வருகிறோம். வருமான பாதிப்பு மற்றும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளவர்களின் சுமையைக் குறைக்க இந்த உதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


