அம்பாங், ஆக 15- “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான வர்த்தக உதவித் திட்டத்திற்கான விண்ணப்ப தேதி இம்மாதம் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் கடந்த வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்த வேளையில் தொழில்முனைவோரிடமிருந்து கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக வரும் 19 ஆம் தேதி வரை அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சித்தம் அமைப்பின் நிர்வாகி தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக சுமார் 300 விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிதியதவி தேவைப்படும் காரணத்தால் அதிகமானோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த 12 ஆ தேதியுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 500 விண்ணப்பங்கள் வரை கிடைத்திருந்தன. இந்த அபரிமித ஆதரவை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை நீட்டிக்க முடிவு செய்தோம் என்றார் அவர்.
சித்தம் திட்ட பங்கேற்பாளர்கள் இருவருக்கு யாயாசான் ஹிஜிரா சிலாங்கூர் வர்த்தக கடனுதவி திட்டத்தின் மூலம் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பம் காலம் முடிவுக்கு வந்தவுடன் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் தீபன் கூறினார்.
இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் சட்டமன்ற தொகுதி சேவை மையங்களும் பங்கேற்கும். விண்ணப்பதார்கள் உண்மையில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்டத் தரப்பினர் அவர்களின் வியாபார மையத்திற்கு நேரில் வருகை புரிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


