அம்பாங், ஆக 15- தடுப்பூசி பெறுவதற்கு தங்கள் ஊழியர்களை அனுமதிக்க மறுக்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில தடுப்பூசித் திட்ட (செல்வேக்ஸ்) செயல்குழு தலைவர் ரோட்சியா இஸ்மாயில் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் என்று அவர் சொன்னார்.
தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக கடும் அமலாக்க நடவடிக்கையை எடுப்பது தொடர்பான அறிவிப்பு மந்திரி புசார் தரப்பிடமிருந்து வெளியிட்டப்படும் என்றார் அவர்.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக இத்தகைய கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று இங்கு சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பூசி மையங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு முன்கூட்டியே பதிந்து கொள்ளும்படி முதலாளிகளை ரோட்சியா கேட்டுக் கொண்டார்.
வருகைக்கான முன்பதிவின்றி வந்த காரணத்தால் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பல தடுப்பூசி மையங்களில் அண்மையில் கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.


