கோலாலம்பூர், ஆக 15- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் டெல்டா வகை நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா உத்தரவாதமளித்துள்ளார்.
லபுவான் மற்றும் சரவா ஆகிய மாநிலங்களை அதற்கு உதாரணம் காட்டிய அவர், தடுப்பூசியின் வாயிலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதோடு வெண்டிலேட்டர் சாதனம் பயன்படுத்தப்படுவதும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இம்மாதம் 31 ஆம் தேதிக்குள்ள கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரியவர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றப் பின்னர் இப்பகுதியில் நோய்த் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாம் நேர்மறையான மாற்றங்களைக் காணத் தொடங்கி விட்டோம். 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு நாம் தடுப்பூசி செலுத்தத் தொடங்கியவுடன் சுங்கை பூலோ மருத்துவமனையில் வயதான நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விட்டது.
தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் 40 முதல் 59 வயது வரையிலான மற்றும் 20 முதல் 39 வயது வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கையும் இன்னும் ஓரிரு வாரங்களில் குறைந்து விடும் என்றார் அவர்.
நேற்று இங்கு இயங்கலை வாயிலாக நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான மலேசிய தேசிய சுகாதார பராமரிப்பு மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


