ஷா ஆலம் ஆக 15- சிலாங்கூர் மாநிலத்தில் பெரிய தொழில் பேட்டைகள் தொடங்கி கிராமங்கள் வரையிலான பகுதிகளில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் “பொய்ஸ்“ எனப்படும் வெப்பத் திட்டு பகுதி நோய்ப் பரவல் தடுப்புத் திட்டத்தில் பதிந்து கொண்டுள்ளன.
தொழிற்சாலைகளில் நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில கோவிட்19 தடுப்பு பணிக்குழு இந்த பொய்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் அமலாக்கத்தின் வழி தொழிற்சாலைகளில் நோய்ப் பரவல் பெரும்பாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் சமூகத்தின் வாயிலாக உருவாகும் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கத்தை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் குறைப்பதற்கு ஏதுவாக கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த பொய்ஸ் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது.


