ஷா ஆலம், ஆக 14- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 6,400 உணவுக் கூடைகளை கோத்தா கெமுனிங் தொகுதி விநியோகித்துள்ளது.
கோத்தா கெமுனிங் தொகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிக்கும் பணி சாதாரண மக்கள் வசிக்கும் பகுதிகளை மட்டுமின்றி வசதியுள்ளவர்கள் வசிக்கும் ஆடம்பர குடியிருப்புளையும் இலக்காக கொண்டிருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் பெரும்பாலான மக்கள் ஆடம்பர குடியிருப்பு பகுதிகளில் வசித்த போதிலும் நிறுவனங்கள் மூடப்பட்ட காரணத்தால் அவர்களில் பலர் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
உணவுப் பொருள்கள் தவிர்த்து மருத்துவ உபகரணங்கள், ஸ்பீட்மார்ட் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கான 80 வெள்ளி பற்றுச்சீட்டு, கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான நிதியதவி போன்ற உதவிகளும் தொகுத் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
இது தவிர்த்து வசதியுள்ள குடும்பம் வசதியற்ற குடும்பத்திற்கு உதவுவதை நோக்கமாக கொண்ட “ஸ்போன்சர் அ பேமிலி“ எனும் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


