ஷா ஆலம், ஆக 13- வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் ஏற்கவில்லை என்று பக்கத்தான் ஹராப்பான் எனப்படும் மக்கள் கூட்டணி கூறியது.
மொத்தம் 398,687 பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 94.6 விழுக்காட்டினர் பள்ளிகள் திறக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளனர் என்று அது தெரிவித்தது.
அந்த ஆய்வில் 87,1 விழுக்காட்டு பெற்றோர்கள் (367,079), 9.7 விழுக்காட்டு ஆசிரியர்கள் மற்றும் 2.4 விழுக்காட்டு பள்ளி பணியாளர்கள் பங்கேற்றதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கல்வி செயல் குழு அறிக்கை ஒன்றில் கூறியது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆகவே, இத்தகைய சூழலில் தங்களின் பிள்ளைகளின் உயிரை பணயம் வைக்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்று அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது.


