கோலாலம்பூர், ஆக 13- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.
இத்திட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உடல் நலப் பிரச்னை இல்லாதவர்களுக்கு வயது வாரியாக தடுப்பூசி செலுத்தும் பணி பின்னர் தொடரும் என்றும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு செயல்குழுவிடம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நோர் ஹிஷாம் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளை அப்பணிக்குழு அடுத்த வாரம் வெளியிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இளையோருக்கு இரு பிரிவுகளாக தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
உடல் நலப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இளையோர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னர் மருத்துவ நிபுணர்களால் சோதிக்கப்பட வேண்டும் என்று கடந்த 12 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் நோர் ஹிஷாம் வலியுறுத்தியிருந்தார்.


