ஷா ஆலம், ஆக 13- கிள்ளான், ஜோஹான் செத்திய பசுமைத் திட்ட பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீச்சம்பவங்களைத் தொடர்ந்து திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைத் திட்டத்தை மாநில அரசு மாநில சுற்றுச்சூழல் துறையின் வாயிலாக அமல்படுத்தவுள்ளது.
சதுப்பு நிலப்பகுதிகளில் திறந்த வெளி தீயிடல் சம்பவங்களைக் கையாள்வதில் தடுப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மீதான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி.) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுச் சூழல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பூர்வக்குடியினர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இரவு நேரங்களில் திறந்த வெளி தீயிடல் சம்பவங்களை அடையாளம் காண்பதற்காக வெப்ப டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோஹான் செத்தியா பகுதியில் நிகழும் திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட சுற்றுச் சூழல் நிலைக்குழு கூட்டத்தில் இந்த டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நாட்டின் பல இடங்களில் மழை குறைந்து வறட்சி நிலை நிலவுகிறது. இந்நிலை செப்டம்பர் மாதம் மத்திய பகுதி வரை நீடிக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த வறட்சி நிலை காரணமாக ஜோஹான் செத்தியா பகுதியிலுள்ள பல இடங்களில் காட்டுத் தீ ஏற்படுகிறது. இதன் காரணமாக காற்றுத் மாசுபாடு ஏற்பட்டு புகைமூட்டப்பட்டப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
ஜோஹான் செத்தியா பகுதியில் திறந்த வெளி தீயிடல் சம்பவங்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக நடப்பிலுள்ள சுற்றுச் சூழல் அதிகாரிகளோடு மலேசிய தன்னார்வலர் துறை உறுப்பினர்களையும் பணியில் ஈடுபடுத்துவதற்கு இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


