ACTIVITIES AND ADS

கோவிட்-19 மரண நிவாரண நிதி டிசம்பர் வரை நீட்டிப்பு- மந்திரி புசார் தகவல்

12 ஆகஸ்ட் 2021, 10:45 AM
கோவிட்-19 மரண நிவாரண நிதி டிசம்பர் வரை நீட்டிப்பு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1,000 வெள்ளியை மரண சகாய நிதியாக வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண சகாய நிதியின் மூலம் மேலும் ஆயிரம் பேர் வரை பயன்பெறும் வகையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த திட்டத்திற்கு இதுவரை 1,500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மரண எண்ணிக்கையும் அதன் காரணமாக நிதிக்கான விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு நிதி ஒதுகீட்டை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களுக்கு ஆயிரம் வெள்ளி மரண சகாய நிதி வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதற்கு நேற்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் https://www.selangorprihatin.com  என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த மரண சகாய நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக இத்திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்த நிவாரண நிதிக்கு விண்ணப்பம் செய்வதற்கான விதிமுறைகள் வருமாறு-

  1. மலேசியராக இருக்க வேண்டும்
  2. இறந்தவர் மற்றும் நிதிக்கு விண்ணப்பம் செய்பவர் சிலாங்கூரில் பிறந்தவராக அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  3. கோவிட்-19 நோய்த் தொற்றினால்தான் மரணம் நேர்ந்தது என்பதை அரசாங்க மருத்துவமனைகள்/கிளினிக்குகள் அல்லது பதிவு பெற்ற மருத்துவ மையங்கள் உறுதி செய்ய வேண்டும். மரணத்திற்கான காரணம் இறப்புச் சான்றிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
  4. மரணச் சம்பவம் சிலாங்கூரில் நேர்ந்திருக்க வேண்டும்
  5. 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நேர்ந்த மரணங்களுக்கு மட்டுமே நிவார நிதி வழங்கப்படும்.
  6. ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே செய்ய முடியும்

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.