ANTARABANGSA

மூன்று புதிய வகை கோவிட்-19 தடுப்பு மருந்துகள் மீது உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை

12 ஆகஸ்ட் 2021, 6:59 AM
மூன்று புதிய வகை கோவிட்-19 தடுப்பு மருந்துகள் மீது உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை

ஜெனிவா, ஆக 12- மூன்று புதிய வகை கோவிட்-19 தடுப்பு மருந்துகள் மீது தாங்கள் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்  நேற்று தெரிவித்தது.

இந்த பரிசோதனை 52 நாடுகளில் உள்ள 600 மருத்துவமனைகளில்  ஆயிரக்கணக்கான பரிசோதனையாளர்களை உட்படுத்தியிருக்கும் என்று ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

கடுமையான மலேரியா நோயைக் குணப்படுத்த உதவும் ஆர்டஸேனட் மருந்து, சில வகை புற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் இமாதினிப் மருந்து, குடல் அழற்சி போன்ற நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுகளை போக்கும் இன்ப்லிஷிமேப் மருந்து ஆகியவையே பரிசோதனைக்குட்படுத்தப்படும் அந்த மூன்று மருந்துகளாகும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் மத்தியில் ஏற்படும் மரணச் சம்பவங்களை குறைக்கும் நோக்கிலான திட்டத்திற்காக இந்த மூன்று வகை மருந்துகளையும் சுயேச்சை நிபுணர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேலும் ஆக்ககரமான வழிமுறையைக் கண்டறிவது தற்போதைக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. உலகலாவிய நிலையிலான அந்த முயற்சியை உலக சுகாதார நிறுவனம் முன்னெடுப்பது பெருமையளிப்பதாக உள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தேட்ரோஸ் அட்னோம் கிப்ரியாசஸ் கூறினார்.

ஏற்கனவே நான்கு வகை மருந்துகள் மீது உலக சுகாதார நிறுவனம் சோதனை மேற்கொண்டது. எனினும் அந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில்  குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.