ஷா ஆலம், ஆக 12- பாலர் பள்ளிக் ஆசிரியர்களுக்கு ஒரு முறை மட்டும் 150 வெள்ளி வழங்கும் மாநில அரசின் நிதியதவித் திட்டத்திற்கு வரும் 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கில் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வழி இந்த உதவி நிதி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இரண்டாம் கட்ட நிதியளிப்புத் திட்டத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.
இந்த நிதியுதவித் திட்டத்திற்கு 3,000 ஆசிரியர்கள் இன்னும் விண்ணப்பம் செய்யவில்லை என்று மாநில அரசு தலைமச் செயலகத்தின் மனித வளப் பிரிவு செயலாளர் முகமது ஹபீஷ் ஷஹாரி கடந்த மாதம் 23ஆம் தேதி கூறியிருந்தார்.
மொத்தம் 10,197 ஆசிரியர்களை இலக்காக கொண்ட இத்திட்டத்திற்கு பதிவு பெற்ற ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாவட்ட கல்வி இலாகா மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தலா 150 வெள்ளியும் மாநிலத்திலுள்ள 1,018 பாலர் பள்ளி நடத்துநர்களுக்கு தலா 450 வெள்ளியும் வழங்குவதற்காக மாநில அரசு 19 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


