புத்ரா ஜெயா, ஆக 11- 2021 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் நாட்டில் பிறப்பு விகிதம் 4.4 விழுக்காடு குறைந்து 111,573 ஆக ஆனது. கடந்த 2020 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 116,688 ஆக இருந்தது.
சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமாக 20,389 குழந்தைகள் இக்காலக் கட்டத்தில் பிறந்ததை மக்கள் தொகை தரவுகள் காட்டுவதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.
அந்த மூன்று மாத காலக் கட்டத்தில் பிறந்த குழந்தைகளில் பெண் சிசுக்களின் எண்ணிக்கையே அதிகமாக அதாவது 55,881 ஆக இருந்ததாக குறிப்பிட்ட அவர், ஆண் சிசுக்களின் எண்ணிக்கை 55,692 ஆகும் என்றார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பை இந்த புள்ளி விபரங்கள் பொய்யாக்கி விட்டன என்றார் அவர்.
குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவு மலேசியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, 2021 இரண்டாம் காலாண்டில் 44,307 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான 40,241 சம்பவங்களை விட இது 10.1 விழுக்காடு அதிகமாகும்.
சிலாங்கூரில் மிக அதிகமாக 6,818 மரணச் சம்பவங்களும் புத்ரா ஜெயாவில் மிகக் குறைவாக 53 மரணச்சம்பவங்களும் இரண்டாம் காலாண்டில் பதிவானதாக முகமது உஸீர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 65-69 வயது வரையிலானவர்கள் அதிகம் மரணமடைந்த வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 70-74 வயதுடையவர்கள் உள்ளனர் என்றார் அவர்.


