கோப்பெங், ஆக 11- அட்டைகளில் அச்சடிக்கப்பட்ட வடிவத்தில் தடுப்பூசி சான்றிதழ்கள் இணையத்தளம் வாயிலாக நாட்டின் தென் பகுதியில் விற்கப்படுவதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
இந்த சான்றிதழ் விற்பனை தொடர்பில் அமைச்சின் பரிசோதனை மற்றும் சட்டப் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு இவ்விவகாரம் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.
தாங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று விட்டதாக ஒரு சிலர் கூறிக் கொள்ளும் சாத்தியம் உள்ளதால் இத்தகைய தடுப்பூசி சான்றிதழ் விற்பனைக்கு தாங்கள் அனுமதியளிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இத்தகைய சான்றிதழ்களைத் தயாரிக்க நாங்கள் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை. கடைகளில் அமர்ந்து உணவருந்த அல்லது எல்லைகளைக் கடக்க விரும்புவோர் மைசெஜாத்ரா செயலியில் உள்ள இலக்வியல் தடுப்பூசி சான்றிதழ் அல்லது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தடுப்பூசி அட்டை ஆகியவற்றை மட்டுமே காட்ட வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
இங்குள்ள சமூக நலத் துறை கட்டிடத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்கள் 15 வெள்ளி விலையில் விற்கப்படுவதாக சுல்தானா பாஹ்யா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் முகமது ருஷ்டான் நோர் கூறியிருந்தார்.


