ஷா ஆலம், ஆக 11- இங்குள்ள செக்சன் 19, டி பல்மா ஹோட்டலில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்காக வருவோரின் வசதிக்காக செமெந்தா தொகுதி வாகன வசதியை ஏற்படுத்தி தருவதோடு பெட்ரோல் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.
தடுப்பூசி செலுத்தும் மையம் தொகுதிக்கு சற்று தொலைவில் உள்ளதால் வாகன வசதி இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரப்படுவதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகமது சாடோன் மூவா கூறினார்.
போக்குவரத்து வசதி தேவைப்படுவோர் கிராமத் தலைவரை அணுகலாம். தொகுதியிலே தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தோம். எனினும், பொருத்தமான இடம் மற்றும் பணியாளர்கள் பிரச்னை காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த இலவச தடுப்பூசித் திட்டத்தின் மூலம் தொகுதியைச் சேர்ந்த 1,000 பேர் வரை பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு 2,600 பேர் பதிவு செய்திருந்ததாகவும் எனினும், தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பலர் தடுப்பூசியைப் பெற்று விட்டதால் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


