கோலாலம்பூர், ஆக 11- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று இலக்கான 19,991 பேரில் 98.1 விழுக்காட்டினர் அதாவது 19,606 பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது மிதமான அறிகுறி கொண்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகள் ஆவர்.
புதிதாக பதிவான மொத்த கோவிட்-19 சம்பவங்களில் 385 நேர்வுகள் அல்லது 1.9 விழுக்காடு மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 4,632 பேர் (23.2 விழுக்காடு) கோவிட்-19 தடுப்பூசியை பெற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 இறக்குமதி சம்பவங்கள் ஏதும் நேற்று பதிவாகவில்லை எனக் கூறிய அவர், மொத்தம் 16,258 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் என்றார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 201 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவான வேளையில் அவற்றில் 34 வீட்டிலேயே நேர்ந்த மரணங்களாகும் என்றார் அவர்.
நாடு முழுவதும் 230,762 பேர் தீவிர நோய்த் தொற்று பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களில் 1,096 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் மேலும் 570 பேர் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடனும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்ட்டார்.


