ஷா ஆலம், ஆக 11- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள விளையாட்டாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை சேர்ந்தவர்களுக்கு 1,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநிலத்திலுள்ள விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசித் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
வருகைக்கான முன்பதிவின்றி நேரடியாக சென்று தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பிப்பினை விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் வழங்குகிறது என்று அவர் சொன்னார்.
முதல் கட்டமாக விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்காக 1,000 தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளோம். மாநிலத்திலுள்ள ஐந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வாயிலாக அவர்கள் இந்த தடுப்பூசிகளைப் பெற முடியும். முதல் கட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் தீர்ந்தவுடன் இத்திட்டம் இரண்டாம் கட்டத்திற்கு முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.
இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் உள்ள தடுப்பூசி மையத்தில் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்னும் தடுப்பூசி பெறாதவர்களை அடையாளம் காண்பதில் சிலாங்கூர் விளையாட்டு மன்றம் மற்றும் தேசிய விளையாட்டாளர் சமூக நல அறவாரியம் ஆகிய அமைப்புகளின் உதவியை மாநில அரசு நாடும் என்றார் அவர்.


