ஷா ஆலம், ஆக 11- இவ்வாண்டில் இதுவரை கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பாயா ஜெராஸ் தொகுதி மக்களுக்கு 300,000 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினருக்கும் அத்தியாவசிய பொருள் உதவி வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார். இத்தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி முறையான ஆவணங்களை கொண்டிருக்கும் அல்லது கொண்டிராத அந்நிய நாட்டினருக்கும் உதவுவது எங்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இந்த பெருந் தொற்று காரணமாக அந்நிய நாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நமது கடமையாகும் என்று அவர் சொன்னார். இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் நடைபெற்ற சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் உணவுக் கூடை திட்டத்திற்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூடுதலாக 50,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி அறிவித்திருந்தார்.