பாகான் செராய், ஆக 10- தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை மைசெஜாத்ரா செயலியில் போலியாக தயாரிக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இத்தகைய செயல்களை சுகாதார அமைச்சும் இதர அமலாக்க தரப்பினரும் கடுமையாக கருதுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.
நெறியற்ற இத்தகையச் செயல்களைத் தடுப்பற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பினர் மேற்கொள்வர் என்று இங்குள்ள இங்குள்ள அபு பாக்கார் அல்-பக்கிர் இடைநிலைப்பள்ளியில் செயல்படும் தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
ஏமாற்றுவது ஒரு இழிவானச் செயல் எனக் கூறிய அவர், நேர்மையின்மை காரணமாக மைசெஜாத்ரா செயலியில் உள்ள தடுப்பூசி சான்றிதழை போலியாக தயாரிப்பது போன்றச் செயல்கள் நிகழ்கின்றன என்றார்.
அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்.ஒ.பி. தளர்வுகளைப் பயன்படுத்தி மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு போலியான தடுப்பூசி சான்றிதழ்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாபியான் மாமாட் அறிவுறுத்தியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
போலி தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் சுகாதார அமைச்சின் சிறப்பு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான திட்டங்கள் வரையப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


