ஷா ஆலம், ஆக 10- கோலக் கிள்ளானில் உள்ள இரு துறைமுகங்களில் சிகிரெட் மற்றும் பல்வேறு வகை மதுபானங்களை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய பிராந்தியத்தின் இரண்டாம் பிரிவு (சிலாங்கூர்) முறியடித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி முதல் இம்மாதம் 2 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடி சோதனை நடவடிக்கைகளில் வரி மதிப்பை உள்ளடக்கிய 20 கோடி வெள்ளிக்கும் கூடுதலான மதிப்புடைய அப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் லத்திப் அப்துல் காடீர் கூறினார்.
இம்மாதம் 21 ஆம் தேதி வட துறைமுகத்தில் இரு கொள்கலன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பத்து லட்சம் வெள்ளி மதிப்புள்ள (வரி மதிப்பு 1.33 கோடி வெள்ளி) 2 கோடி சிகிரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.
அதே தினத்தில் அதே துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 17 லட்சத்து 80 சிகிரெட்டுகளும் 7,838 லிட்டர் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி சுங்கத் துறை மேற்கொண்ட மற்றொரு சோதனையில் சுமார் 16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மதுமானங்கள் இரு கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.


