ஷா ஆலம், ஆக 8- மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரு மடங்கு உயர்ந்து 740 ஆனது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 273 ஆக இருந்தது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 18,517 ஆகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான நடப்பு ஆய்வக அடிப்படையில் இந்த விபரங்கள் தெரிய வந்ததாக கூறிய அவர், நோய்த் தொற்று கண்டது முதல் பலர் அதே கட்டத்தில் இருந்து வருவதாகச் சொன்னார்.
எனினும், சிலர் அக்கட்ட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் மேலும் சிலரின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
அபாயக் கட்டத்தில் உள்ள மற்றும் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நோயாளிகள் ஐந்தாம் கட்டத்தினராக வகைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் நான்காம் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் 14 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படும்.
அதே சமயம் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட மூன்றாம் கட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.


