செர்டாங், ஆக 7- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கோவிட்-19 நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலை போக்குவதற்கு 100 சுற்றுலா வேன்களை ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பு மற்றும் நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதில் நிலவும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தற்போது அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் பெரும் வருமான இழப்பை எதிர்நோக்கியிருக்கும் சுற்றுலா வேன் உரிமையாளர்களுக்கு உதவும் நோக்கிலும் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது என்றார் அவர்.
இந்நோக்கத்திற்காக சுற்றுலா வேன்களை ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றவுள்ளோம். இவ்விவகாரம் தொடர்பில் சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சுடன் பேச்சு நடத்தவிருக்கிறோம் என்றார் அவர்.
செர்டாங் மேப்ஸ் மையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த தனிமைப்படுத்தும் நேற்று சிகிச்சை மையத்திற்கு (பி.கே.ஆர்.சி.) நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் சுற்றுலா வேன் உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் கட்டணம் குறித்து வினவப்பட்டதற்கு அது குறித்து சுகாதார அமைச்சும் சுற்றுலாத் துறை அமைச்சும் விவாதிக்கும் என்று அவர் பதிலளித்தார்.


