கோலாலம்பூர், ஆ 7- கோவிட்-19 நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை இம்மாத இறுதியில் குறையத் தொடங்கும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.
நாட்டிலுல் 40 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவுடன் இந்த இலக்கை அடைய முடியும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு உலக நிலவரத்திற்கு ஏற்ப உள்ளதாக கூறிய அவர், கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலத்தில் ஒரு லட்சம் பேர் என்ற மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் ஐந்து மாநிலங்களில் நோய்ப் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் அதிக நோய்த் தொற்று கண்ட மாநிலமாக கோலாலம்பூர் உள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, கெடா ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு முதல் தேதி வரை வரையிலான காலக்கட்டத்தில் நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 286 இல் இருந்து 401 ஆக உயர்ந்துள்ளது. வேலையிட தொற்று மையங்களும் 180லிருந்து 213 ஆக ஏற்றம் கண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் மத்தியில் பரவும் தொற்று மையங்களின் எண்ணிக்கையும் 86லிருந்து 142 ஆக அதிகரிப்பைக் கண்டது. விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 பரிசோதனைகள் மற்றும் நோய்த் தொற்றுக்கு எதிராக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஆகியவை இதற்கு காரணமாகும் என்றார் அவர்.


