ஷா ஆலம், ஆக 6- அரசு நிர்வாகத்தின் அனைத்து நிலையிலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சிலாங்கூர் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
அண்மைய காலமாக சிலாங்கூரிலுள்ள அரசு ஊழியர்களின் உயர்நெறி மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வியெழுந்ததுள்ளது தொடர்பில் அவர் ,இவ்வாறு கருத்துரைத்தார்.
அரசு நிர்வாகத்தின் அனைத்து நிலையிலும் ஊழலுக்கு ஒரு போதும் இடமில்லை. இதுவே, மாநில அரசின் உறுதியான மற்றும் தெளிவான நிலைப்பாடாகும் என்றார் அவர்.
அதே சமயம், குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளி இல்லை என்ற நிலைப்பாட்டிலும் மாநில அரசு உறுதியாக உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மக்களுக்கு சேவை வழங்கும் முறையை உயர்நெறி அம்சங்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் திறனுடனும் ஆக்ககரமான முறையிலும் மேற்கொள்ளும்படி அனைத்து அரசு ஊழியர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தின் தலைமை ஆணையரை சந்தித்த மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், ஊழல் புரிந்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்பி விடாமலிருக்க விசாணைகளை விரிவான அளவில் மேற்கொள்ளும்படி பணித்திருந்தார்.


