மூவார், ஆக 6- இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு தளர்வுகள் மற்றும் சலுகைகள் வழங்குவது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு செய்யப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
அந்த உத்தேச தளர்வுகள் மற்றும் சலுகைகள் மற்றும் அதன் தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பரிசீலிக்கும் பணியில் தேசிய பாதுகாப்பு மன்றம் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் வெகு நாட்களாக காத்திருக்கும் அந்த அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியிடப்படும் என்று பெல்டா லெங்காவில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அந்த தளர்வுகள் மற்றும் சலுகைகளில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதும் ஒன்றாகும். பெற்றோர்கள் மற்றும் கணவர் அல்லது மனைவியை நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்று காண்பதற்குரிய வாய்ப்பினை இது ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி விதிமுறைகளை அவசியம் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


