உலு சிலாங்கூர், ஆக 5- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் சுமார் இரண்டு லட்சம் டோஸ் மருந்தளவு தடுப்பூசிகள் இன்னும் மீதமுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்னும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு செலுத்துவதற்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் மத்திய அரசின் தடுப்பூசி இயக்கம் வெற்றி பெறுவதை உறுதி செய்ய இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தை விரைவு படுத்தும் நடவடிக்கையில் நாங்கள் தீவிரம் காட்டவுள்ளோம் என்று அவர் சொன்னார்.
பொது மக்களுக்கு செலுத்துவதற்காக நாம் ஒதுக்கியுள்ள 500,000 தடுப்பூசிகளும் முழுமையாக பயன்படுத்தப்படும் வகையில் இது வரை தடுப்பூசி பெறாதவர்களையும் தடுப்பூசி மையத்திற்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளவர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் மாநில அரசு ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று செராண்டா சமூக மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்டும் அப்போது உடனிருந்தார்.


