![]() ![]() |
|||
ஷா ஆலம், ஆக 5- தகுதி உள்ளவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூரில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தலா 200 கைப்பேசிக்கான் சிம் கார்டுகள் வழங்கப்படும்.இந்த சிம் கார்டை பெறுவோருக்கு 12 மாதங்களுக்கு இலவச இணைய சேவை வழங்கப்படும் என்றும் இதற்கான செலவுகளை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இணைய சேவை இப்போது நமது வாழ்வில் இன்றியமையாத ஒரு தேவையாகி விட்டது. தற்போதைய சூழ்நிலையில் நாம் வீட்டில் இருந்தாலும் வேலை, வியாபாரம், கல்வி உள்பட அனைத்து தேவைகளுக்கும் இணைய சேவை அத்தியாவசியமானதாக உள்ளது.
புதிய இயல்பில் வாழ வேண்டிய நிலையில் இருக்கும் நமக்கு இணைய சேவை அவசியமாகத் தேவைப்படுகிறது. இதர அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் காரணமாக அனைவராலும் இணைய வசதியை பெற இயலவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த இணைய சேவை திட்டம் தொடர்பான அறிவிப்பை முகநூல் வாயிலாக அறிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த இணைய சேவையை பெற விரும்புவோர் தங்கள் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தொகுதி சேவை மையங்கள் தொடர்பான விபரங்களை www.platselangor.com அகப்பக்கம் வழி தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.



