ஷா ஆலம், ஆக 3- சுங்கை காண்டீஸ் தொகுதி நிலையிலான செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவதற்காக தடுப்பூசி மையங்களுக்கு செல்வோருக்கு இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது பேருந்தை இலவசமாக வழங்கி உதவியுள்ளார்.
நிறுவன சமூக கடப்பாட்டு அடிப்படையில் இந்த பஸ் சேவையை தாம் இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக பஸ் நிறுவன உரிமையாளரான ஜி.கணேசன் (வயது 57) கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பள்ளிகள் மற்றும் உயர் கல்விக் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் தம்மிடம் உள்ள மூன்று பஸ்களும் பயன்படுத்தப்படாமலிருப்பதாக அவர் சொன்னார்.
அந்த பஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே இருப்பதைக் காட்டிலும் தடுப்பூசி பெறுவோரை தடுப்பூசி மையங்களுக்கு கொண்டுச் செல்வதற்கு பயன்படுத்த முடிவெடுத்தேன் என்று அவர் மேலும் சொன்னார்.
வசதி குறைந்த பலர் போக்குவரத்து வசதி இல்லாமலிருப்பதை நான் உணர்ந்துள்ளேன். அவர்களின் சுமையைக் குறைப்பதற்கு என்னால் இயன்ற வழியில் உதவுகிறேன் என்றார் அவர்.
இந்த பஸ் சேவையை வழங்கும் போது கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிப்பதை தாம் உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பஸ்களில் 44 பயணிகள் பயணம் செய்வதற்கு வசதி இருந்த போதிலும் குறைவானவர்களை மட்டுமே பஸ்சில் அனுமதிக்கிறோம். இதனால் பல முறை பயணம் மேற்கொள்ள வேண்டி வருகிறது என அவர் சொன்னார்.
தடுப்பூசி பெறுவோர் இந்த பஸ் சேவையைப் பயன்படுத்தி ஜாலான் கெபுனிலிருந்து ஷா ஆலம் செக்சன் 19 இல் உள்ள டி பல்மா ஹோட்டலில் செயல்படும் தடுப்பூசி மையத்திற்குச் சென்றனர்


