கோலாலம்பூர், ஜூலை 28- சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் ஒப்பந்த மருத்துவர்கள் கடந்த திங்கள் கிழமை நடத்திய அமைதி மறியல் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை அறிக்கையை திறக்காது.
கோலாலம்பூர் மருத்துவமனை உள்பட மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் நடைபெற்ற இந்த மறியலில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படாது என்று கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
அந்த மறியல் விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் சுருக்கமாகத் தெரிவித்தார்.
இதனிடையே, அந்த மறியல் சம்பவங்கள் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீசார் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
எனினும், செர்டாங் மலேசிய விவசாய கண்காட்சி மையத்திலுள்ள பி.கே.ஆர்.சி. தனிமைப்படுத்தும் மையத்தில் நடைபெற்ற மறியலின் போது பத்திரிகையாளர்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பில் கிடைத்த புகாரின் அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் விசாரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியின்றி அந்த மேப்ஸ் மையத்தில் நுழைந்தது தொடர்பான கோணத்தில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
ஒப்பந்த மருத்துவர்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும், இதர மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பனப் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த மருத்துவர்கள் கடந்த திங்களன்று மறியலில் ஈடுபட்டனர்.


