புக்கிட் ஜாலில், ஜூலை 28- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 2,600 பேர் பதிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக நேற்று 1,100 பேரும் இன்று 1,500 பேரும் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றதாக அவுரோரா செல்கேர் தடுப்பூசி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நோர் ஸூல்ஹபிஸா ஜக்காரியா கூறினார்.
முறையான பயணப் பத்திரங்களைக் கொண்டுள்ள 200 அந்நிய நாட்டினரும் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றனர். இதன் வழி ஸ்ரீ செர்டாங் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2,600 தடுப்பூசிக்கான கோட்டா முழுமை பெற்றுள்ளது என்றார் அவர்.
இந்த தடுப்பூசி இயக்கத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சமூகத்தில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் தடுப்பூசி இயக்கத்தில் அதிகமானோர் பங்கேற்ற போதிலும் தொண்டூழியர்கள் மற்றும் செல்கேர் பணியாளர்களின் உதவியுடன் தடுப்பூசி செலுத்தும் பணி சீராக மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த தடுப்பூசித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கைகளை தொகுதி பொறுப்பாளர்கள் மேற்கொண்ட வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை செல்கேர் பணியாளர்கள் மேற்கொண்டனர் என்றார் அவர்.


