ஷா ஆலம்,ஜூலை 28- ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டு பிடிக்கப்படும் அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் பட்டங்கள் அல்லது உயரிய விருதுகள் பறிமுதல் செய்யப்படும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் எச்சரித்துள்ளார்.ஊழல் நடவடிக்கைகள் மாநிலத்திலுள்ள ஒட்டுமொத்த அரசாங்க அதிகாரிகளின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
மாநிலத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள் யாரேனும் ஊழலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளையில் குற்றத்தின் தன்மைக்கேற்ப கடுமையான தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில அரசின் பட்டங்கள் அல்லது உயரிய விருது பெற்றவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் விருதுகள் பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர்.
சுல்தான் அவர்களின் சிறப்பு அதிகாரி டத்தோ லீலா பக்தி டத்தோ முகமது முனீர் பானி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
ஊழல் புகார் தொடர்பில் மாவட்ட அதிகாரிகள் உள்பட மாநில அரசு அதிகாரிகள் சிலர் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரணைக்காக அண்மையில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ECONOMY
ஊழலில் ஈடுபட்டவர்களின் விருதுகள் பறிக்கப்படும்- சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை
28 ஜூலை 2021, 5:13 AM


