அம்பாங், ஜூலை 28- பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவி தொடர்பான விண்ணப்பங்களை பண்டான் இண்டா தொகுதி பரிசீலித்து வருகிறது.
சிறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உதவி தேவைப்படுவோருக்கு ரொக்கமாக வழங்கும் இத்திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு உண்மையில் உதவித் தேவைப்படுவோருக்கு மட்டுமே நிதியுதவி அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இங்குள்ள மெர்பாத்தி அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடங்கி இதுவரை தொகுதியிலுள்ள மக்களுக்கு தொகுதி சேவை மையம், தனிநபர்கள், பொது அமைப்புகளின் பங்களிப்பின் மூலம் சுமார் 6,000 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 40 மடிக்கணினிகள் மற்றும் 60 கையடக்க கணினிகள் வரும் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


