ஷா ஆலம், ஜூலை 28- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று வரை சுமார் 937,000 பேர் அல்லது 19.74 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 36 லட்சத்து 80 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசி இயக்கம் தொடர்பான தரவுகள் அடங்கிய விளக்கப்படத்தை தனது வாயிலாக அவர் பகிர்ந்து கொண்டார். 27 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக 125,351 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டும் என்று அமிருடின் கடந்த 18 ஆம் தேதி கூறியிருந்தார்.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டம், மத்திய அரசின் பிக் திட்டம் மற்றும் பிக்காஸ் எனப்படும் அரசாங்க மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக இந்த இலக்கை எட்ட முடியும் என அவர் சொன்னார்.


