புத்ரா ஜெயா, ஜூலை 27- கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 22.5 விழுக்காடு உயர்ந்து 202,400 பேராக உயர்ந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 165,200 பேராக இருந்ததாக தேசிய புள்ளிவிபரத் துறை கூறியது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட சாதகமற்ற சூழல் மற்றும் அதன் விளைவாக ஒட்டுமொத்த ஆள்பலச் சந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகிய காரணங்களால் இந்நிலை உருவானதாக தேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மஹிடின் கூறினார்.
அதோடு கடந்த 2019ஆம் ஆண்டில் 3.9 விழுக்காடாக இருந்த வேலையில்லாத பட்டதாரிகளின் விகிதாசார அளவு கடந்தாண்டு 0.5 விழுக்காடு அதிகரித்து 4.4 விழுக்காடாக ஆனதாக அவர் தெரிவித்தார்.
வேலையில்லா பட்டதாரிகளில் சுமார் 75 விழுக்காட்டினர் தீவிரமாக வேலை தேடி வருகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குறைந்தது மூன்று மாதங்களாக வேலையின்றி இருந்து வருகின்றனர் என்றார் அவர்.
பல்கலைக்கழகங்கள், கல்லுரிகள், போலிடெக்னிக் கல்விக்கூடங்கள் மற்றும் அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கூடங்களில் குறைந்தது ஈராண்டு பயின்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் பட்டதாரிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 43 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரி பணியாளர்களில் 68.8 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்ற தொழில்துறையினர் பிரிவில் இடம் பெற்றிருந்தாக டத்தோஸ்ரீ உஸீர் தெரிவித்தார்.


