கோலாலம்பூர், ஜூலை 27- அவசரகாலம் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடன் ஹசான் இன்றே நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கிய போது இவ்விவகாரம் தொடர்பான தீர்மானத்தை பூச்சோங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் கட்சி உறுப்பினர் கோவிந்த் சிங் டியோ கொண்டு வந்தார்.
அவசரகாலச் சட்டம் இம்மாதம் 21 ஆம் தேதி அகற்றப்பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது தொடர்பில் அமைச்சர் தக்கியுடின் வரும் திங்கள் கிழமை அல்லாமல் இன்றே உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமைச்சரின் அந்த அறிவிப்பு நம்மிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி அவசரகாலத்தை மீட்கும் முடிவு மாமன்னரின் ஒப்புதலைப் பெற்றள்ளதா? நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா? என்பனப் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தாக வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த அவசரகாலச் சட்டம் உண்மையில் ரத்து செய்யப்பட்டிருந்தால் அது குறித்து எங்களிடமும் மக்களிடமும் ஏன் தெரிவிக்கவில்லை. அந்த முடிவு எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அதன் தொடர்பான அறிக்கை ஏன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவில்லை என்று கோவிந்த் சிங் கேள்வியெழுப்பினார்.
இதே கருத்தை வெளியிட்ட லெம்பா பந்தாய் பக்கத்தான் உறுப்பினர் ஃபஹாமி பாட்சில், சிப்பாங் உறுப்பினர் ஹனிபா மைடின் ஆகியோர் மக்களுக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் இந்த முடிவு குறித்து தெளிவான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


