ஷா ஆலம், ஜூலை 27- கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1 அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) முன்கூட்டியே அகற்றப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
அந்த குடியிருப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு பி.கே.பி.டி. ஆணையை முன்கூட்டியே நீக்குவதற்கு தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது ஜைனால் முகமது நோர் கூறினார்.
இம்மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கவேண்டிய அந்த கட்டுப்பாட்டு ஆணையை விரைந்து அகற்றுவதற்கான விண்ணப்பத்தை மாவட்ட சுகாதார இலாகா தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளவர்கள் தவிர்த்து அக்குடியிருப்பில் உள்ள இதர அனைத்து 1,116 குடியிருப்பாளர்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
அங்குள்ள 626 பேரிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 212 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
நோய்த் தொற்று உள்ள அனைவரும் இக்குடியிருப்பு பகுதியில் உள்ள தற்காலிக கோவிட்-19 மதிப்பீட்டு மையத்திற்கு (சி.ஏ.சி.) வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? அல்லது மேல் சிகிச்சைக்காக பி.கே.ஆர்.சி. மையங்களுக்கு அனுப்புவதா? என்று அங்கு முடிவு செய்யப்படும் என்றார் அவ்ர.
நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக பண்டார் புக்கிட் திங்கி 1 பகுதியில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு பி.கே.பி.டி. ஆணை அமல்படுத்தப்பட்டது.


