ஷா ஆலம், ஜூலை 25- சிலாங்கூரிலுள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை அறை, கிளினிக் மற்றும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு ஏதுவாக கூடுதல் வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகடிமான் கூறினார்.
தற்காலிக வார்டுகளாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தற்காலிக கூடாரங்களும் அனைத்து மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 81 படுக்கைகள் கொண்ட அந்த தற்காலிக கூடாரங்களில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக மின் விசிறி, சுத்தமான குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தும் பணி கடந்த 21 ஆம் தேதி முற்றுப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரலாகி வரும் செர்டாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் நிலைமையை சித்தரிக்கும் படங்கள், புதிய உபகரணங்கள் வந்து சேர்வதற்கு முன்னர் செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடுகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு காணும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு சுகாதார இலாகா முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.


