ECONOMY

பெரும்பாலான எம்.பி.க்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்- மக்களவை சபாநாயகர் தகவல்

25 ஜூலை 2021, 7:55 AM
பெரும்பாலான எம்.பி.க்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்- மக்களவை சபாநாயகர் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 25- பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக மக்களவை சபாநாயகர் டத்தோ  அஸஹார் அஜிசான் ஹருண் தெரிவித்துள்ளார்.

முப்பத்தைந்து உறுப்பினர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் நான்கு உறுப்பினர்கள் சில காரணங்களுக்காக அறவே தடுப்பூசியை பெறவில்லை. இருந்த போதிலும் அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசியைப் பெறாத போதிலும் அனைத்து எம்.பி.க்களும் அவையினுள்  அனுமதிக்கப்படுவர். எனினும், மிகவும் கவனமுடன் இருக்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதிலிருந்து எங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

நாளை திங்கள் கிழமை தொடங்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்,  தொடர்பில் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அஸஹார் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றப் பணியாளர்கள் அனைவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேசிய கோவிட்-19 ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் முன்னதாக தாம் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக கூறிய அவர், இதுவரை 90 விழுக்காட்டு பணியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்றார்.

நாடாளுமன்றத்திற்கு வரும் அமைச்சுக்களின் அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள், குத்கையாளர்கள் உள்பட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அவர் நினைவுறுத்தினார்.

நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே இச்சோதனை நடத்தப்படும். தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார் அவர்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.