கோலாலம்பூர், ஜூலை 25- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறிய குற்றத்திற்காக 49 வணிக மையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளை மூட உத்தரவிடப்பட்டது.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பணிக்குழு தொழிற்சாலைகள், வர்த்தக மையங்கள், கட்டுமானப் பகுதிகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள் உள்பட 80,868 இடங்களில் இதுவரை சோதனை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 337 கைதுகள் செய்யப்பட்டதாக கூறிய அவர், அவர்களில் 332 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு மேலும் ஐவர் தடுத்து வைக்கப்பட்டனர் என்றார்.
இது தவிர, ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் வாயிலாக குடிநுழைவுத் துறையினர் ஐந்து சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்து ஏழு வாகனங்களை பறிமுதல் செய்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, பேராக், பகாங், கெடா, மற்றும் சபாவிலுள்ள ஒன்பது இடங்களில் இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


