ஷா ஆலம், ஜூலை 23- கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவர்கள் வரும் ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்து அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் அழைப்பு கிடைக்காத கிள்ளான் பள்ளத்தாக்குவாசிகள் ஆகஸ்டு முதல் தேதிக்குப் பின்னர் தடுப்பூசி பெற நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் செல்லலாம்.
நேரில் சென்று தடுப்பூசி பெறுவதற்கான வசதி உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு கூறியது.
தடுப்பூசி பெறுவதற்கான தேதி இன்னும் கிடைக்காத சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் குடியிருப்பாளர்கள் வரும் ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி பெறலாம் என சி.ஐ.டி.எஃப். கடந்த திங்களன்று கூறியிருந்தது.
உள்நாட்டினர், வெளிநாட்டினர் மற்றும் அடையாளப் பத்திரங்கள் இல்லாத தரப்பினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த அமைப்பு கூறியது.


