ஷா ஆலம், ஜூலை 23- தங்களின் இரண்டு டோஸ் தடுப்பூசி டெல்டா வகை நோய்த் தொற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கொரோனாவேக் கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கும் சினோவேக் பயோடெக் லிமிடெட் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
அந்த தடுப்பூசியின் ஆக்கத்திறன் குறித்த தரவுகள் தற்போதைக்கு இல்லாத போதிலும் சினோவேக் தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படும் பிரேசில், இந்தோனேசியா, சிலி, துருக்கி போன்ற நாடுகளில் சிறந்த பலன் கிடைத்துள்ளதை ஆய்வுகள் காட்டுவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் லியு பெய் செங் கூறினார்.
கடுமையான பாதிப்புகளிலிருந்தும் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்தும் இந்த தடுப்பூசி 90 விழுக்காடு பயனைத் தருகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னர் நோய்த் தொற்று விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் சொன்னார்.
அதே சமயம், சினோவேக் தடுப்பூசி டெல்டா வகை நோய்த் தொற்றுக்கு எதிராக ஆக்ககரமான பலனைத் தருவதாகவும் பெர்னாமா செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளில் ஒன்றாக சினோவேக் விளங்குகிறது. எனினும், டெல்டா போன்ற மிகவும் ஆபத்தான நோய்த் தொற்றுகளுக்கு எதிரான அதன் ஆக்கத் தன்மை குறித்து அண்மைய காலமாக சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சினோவேக் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்படும் என்று அரசாங்கம் கடந்த 16 ஆம் தேதி கூறியிருந்தது.
சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு தடுப்பூசியை செலுத்துவதற்கான தேவை குறித்த கேள்விக்கு, மூன்றாவது தடுப்பூசியின் வழி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக உயரும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக லியு சொன்னார்.


