ஷா ஆலம், ஜூலை 23- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் 7,444 வணிகர்களுக்கு 8 கோடியே 13 லட்சத்து 70 வெள்ளியை ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் கடனுதவியாக வழங்கியது.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை மூலதன சுழல்நிதியாக இந்த கடனுதவி வழங்கப்பட்டதாக ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பாராடி முகமது நோர் கூறினார்.
பெருந்தொற்று காலத்தில் வணிகர்களுக்கு ஏற்பட்ட நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் இரண்டாவது முறையாக மோரோட்டோரியம் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான சலுகையை ஒன்றரை மாதத்திற்கு வழங்கியது. மேலும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்களின் வசதிக்காக கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மறு சீரமைப்பு செய்துள்ளது என்றார் அவர்.
இந்த சலுகைகளைப் பெற விரும்புவோர் மாநிலத்திலுள்ள 20 ஹிஜ்ரா அறவாரிய கிளை அலுவலங்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.hijrahselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாகவும் மேல் விபரங்கள் பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.
மற்ற வர்த்தகர்களும் இந்த ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதற்கு ஏதுவாக கடன் பெற்றவர்கள் தங்களின் தவணைப் பணத்தை முறையாக திரும்ப செலுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


